உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக் கல்யாணம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து, திருமண அலங்காரத்தில் மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முன்னதாக, மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகிய மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சந்திப்பு மண்டபம் வந்தனர். கோயில் ஒடுக்க மண்டபத்தில் எழுந்தருளினர்.

திருக்கல்யாணம்: கண்ணுாஞ்சல் நிகழ்ச்சி முடிந்து ஆறுகால் பீடத்தில் முதலில் மீனாட்சி அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரர், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். மாப்பிள்ளை பிரதிநிதியாக ஆனந்த் சிவாச்சாரியார், பெண் பிரதிநிதியாக பிரபு சிவாச்சாரியார் இருந்தனர். சுவாமிக்கு வெண் பட்டும், தெய்வானைக்கு பச்சை பட்டும் சாத்துப்படியானது. பின்னர் திருக்கல்யாணம் நடந்தது.இரவில் 16கால் மண்டபம் முன்பு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி, பூப்பல்லக்கில் தெய்வானை எழுந்தருளினர். அங்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரிடம் விடைபெறும் நிகழ்ச்சி முடிந்து வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி அருள்பாலித்தார்.

திருக்கல்யாண சீர்வரிசை: திருக்கல்யாணத்திற்கு சோலைமலை முருகன் கோயிலில் இருந்து சீர்வரிசைகள் கொண்டு வரப்பட்டன. சுவாமிக்கு வெண் பட்டு வேட்டி, தெய்வானைக்கு மஞ்சள் பட்டு புடவை, வளையல்கள், மஞ்சள் கிழங்கு, குங்குமம், தேங்காய், பழம், பலாப்பழம், தாலிகயிறு சீர்வரிசையாக கொண்டு வரப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !