ஆண்டாள் கோயிலில் ஓ.பி.எஸ்.,குதிரை கால்களை வணங்கி உருக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார்: பரபரப்பான அரசியல் சூழலில் முன்னாள்முதல்வர் பன்னீர்செல்வம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், குலதெய்வ கோயில்களில் சிறப்பு பூஜை செய்தார். குதிரை, பசுவின் கால்களை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். நேற்று முன்தினம் இரவு 11:25 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் வந்த பன்னீர் செல்வத்திற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். ராஜபாளையத்தில் தங்கிய அவர் நேற்று காலை, ஆண்டாள் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றார்.வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் குதிரை, பசு, கன்றுவின் கால்களை தொட்டு வணங்கி, ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தார். பின், குல தெய்வமான செண்பகதோப்பு பேச்சியம்மன் கோயிலில் அபிஷேகம் செய்து வழி பட்டார்.இரட்டை இலை நமதேஆண்டாள் கோயில் வெளியே, இரட்டை இலையும் நமதே; இடைத்தேர்தல் வெற்றியும் நமதே, என கூறினார். செண்பகதோப்பு கோயிலில், அவ்வப்போது குலதெய்வ கோயிலுக்கு வருவேன்; அதுபோல வந்துள்ளேன், என கூறிச் சென்றார்.
உயர்வு தருவாள் ஆண்டாள்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் சன்னிதி கொடிமரம் அருகே பன்னீர்செல்வத்தின் மனைவி, சகோதரியை சந்தித்த மூதாட்டிகள் இருவர், நல்லதே நடக்கும், கவலை வேண்டாம்; உயர்வு தருவாள் ஆண்டாள் என, கூறினர்; அவர்களை இருவரும் கையெடுத்து வணங்கினர். பன்னீர்செல்வத்தை பார்த்த சேலம் ஐயப்ப பக்தர்கள், அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். செண்பகதோப்பிலும் தொண்டர்கள் போட்டிபோட்டு போட்டோ எடுத்துக் கொண்டனர்.