ஆன்மிக அடையாளமான எல்லை கல்
தேவாரம்: தேவாரம் மெயின் பஜாரில் ரோட்டின் நடுவே சக்திகல் ஒன்று உள்ளது. காவல் தெய்வம் கருப்பசாமியாக மக்களின் ஆன்மிக நம்பிக்கை கொண்ட எல்லை கல்லாக இது திகழ்கிறது. கோயில் திருவிழா நாட்களிலும், வெள்ளி, செவ்வாய்கிழமைகளிலும் இதற்கு மஞ்சள், குங்குமம் பூசி இப்பகுதி மக்கள் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். இங்கிருந்து ஆன்மிக தலங்களுக்கும், விசேஷங்களுக்கு வெளியூர் செல்பவர்களும் இந்த எல்லை கல்லை வழிபட்ட பின் சென்றால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படியே மக்கள் செல்கின்றனர்.
பல தலைமுறையாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஊரில் உள்ள எந்த கோயிலில் திருவிழா என்றாலும் இந்த எல்லை கல்லுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இப்பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் கூறுகையில், எல்லை கருப்பசாமியாக கருதப்படும் இந்த கல் இருக்கும் பகுதிக்கு மேற்கே ஊர் இருந்தது. வெளியூரிலிருந்து வருபவர்கள் அறிந்து கொள்ள எல்லை கோயிலும் நடுகல்லும் வைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் நடுகல்லை மட்டுமே வழிபடும் முறை பின்பற்றப்படுகிறது. செல்லாயி அம்மன், காளியம்மன் கோயில் திருவிழா கொண்டாடும் போது சக்தி வேண்டி ஆட்டுகிடா இந்த கல்லில் வைத்து பலியிடப்படுகிறது. இப்பகுதியினர் தங்கள் குறைகளை நிறைவேற்றும் ஆன்மிக அடையாளமாக இந்த கல்லை பார்க்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவதை தினமும் பார்க்கலாம்,” என்றார்.