பூசாரி கோவிலுக்கு வர எதிர்ப்பு: சர்ச்சைக்கு இடையே பண்டிகை
கொளத்தூர்: கொளத்தூர் அடுத்த கோட்டையூர் குஞ்சுமாரியம்மன் கோவில் பண்டிகையில், பூசாரி பங்கேற்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பதட்டம் ஏற்பட்டது. சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம், காவேரிபுரம் அடுத்த கோட்டையூரில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அருகே, குஞ்சு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த இரண்டு கோவிலுக்கும், தெலுங்கனூரை சேர்ந்த வெங்கடேசன், 52 பூசாரியாக இருந்தார். இந்நிலையில், நேற்று குஞ்சுமாரியம்மன் கோவில் பண்டிகை நடந்த போது, ’பூசாரி வெங்கடேசன் கோவிலுக்கு வரக்கூடாது; ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்படும் பூசாரி, சுவாமிக்கு பூஜைகளை நடத்தக்கூடாது’ என, பக்தர்களின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வெங்கடேசன் கோவிலுக்கு வரவில்லை. எனினும், சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்ததால், அசம்பாவிதம் தவிர்க்க கொளத்தூர் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.