சத்தியமா...உங்களுக்குத்தான் ஓட்டுப்போட்டேன்: கோவிலில் சத்தியம் செய்ய பக்தர்கள்!
திருப்புவனம் : உள்ளாட்சித் தேர்தல் முடிவு தெரிந்தும், முடியாத கதையாக மடப்புரம் காளிகோவிலில் சத்தியம் செய்வது அதிகரித்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் உறவுக்காரர்களுக்குள் போட்டி ஏற்பட்டதால் சண்டை, சச்சரவு அதிகரித்தது. பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் அதிகமாக கொடுத்து இருந்தாலும், யாரும் புகார் செய்யாததால் பிரச்னை ஏற்படவில்லை. பல குக்கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சித் தலைவர் பதவிக்கு பலத்த போட்டி இருந்தது. சில குக்கிராமங்களில் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து வேட்பாளரை நிறுத்தி இருந்தனர். அந்த கிராம ஓட்டுகள் மட்டும் விழுந்தாலே வெற்றி பெறும் நிலையிலும், அவர் தோல்வி அடைந்துள்ளார். கிராம கட்டுக்கோப்பை மீறி, யார் வெளியூர் வேட்பாளருக்கு ஓட்டு போட்டது என்ற சந்தேகத்தால், மீண்டும் கிராமங்களில் சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தை போக்கவும், மீறி ஓட்டு போட்டவர்களை தண்டிப்பதற்கும், காவல்தெய்வமான மடப்புரம் "காளி துணையை சிலர் நாடியுள்ளனர். அதன்படி "வேண்டும் வரம் கொடுக்கும், பொய் சொல்வோரை பழி தீர்க்கும் என, மடப்புரம் காளிகோவிலில் சத்தியம் செய்ய, தினமும் கிராமத்தினர் வந்த வண்ணம் உள்ளனர். சத்தியமா... உங்களுக்குத்தான் ஓட்டுப்போட்டேன் -என எரியும் சூடத்தை அணைத்து சத்தியம் செய்வதால், வழக்கத்தை விட லாரிகளில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.