சபரிமலை வளர்ச்சி பணிகள்:7ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!
பத்தனம்திட்டா:மண்டல கால பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அங்கு பக்தர்களின் வசதிக்காக நடந்து வரும் பணிகளை, 7ம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல கால பூஜை வரும் 16ம் தேதி துவங்க உள்ளது. தரிசனத்திற்காக, சபரிமலைக்கு வரவிருக்கும் கோடிக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக நடைபெற்று வரும் பணிகளை, மாவட்ட கலெக்டர் வேணுகோபால் பார்வையிட்டார். பின்னர், நிலக்கல் விருந்தினர் மாளிகையில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், அவர் கலந்து கொண்டார். வடசேரிக்கரா, ரான்னி, பெருநாடு போன்ற பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில், பக்தர்கள் நீராடும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் வேலிகள் அமைக்க உத்தரவிட்டார். பம்பை உட்பட பல்வேறு இடங்களில், பக்தர்கள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு விடுதிகள் அருகே செய்யப்படவேண்டிய பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் குப்பைகள், கழிவுகளை கொட்டி பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வரும் வாகனங்கள், அவரவர் மாநிலங்களுக்காக நிலக்கல் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தவும், அவ்வாகனங்களில் வரும் பக்தர்களை அங்கிருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் மட்டும் பம்பைக்கு கொண்டு சென்று அவர்கள் தரிசனம் முடிந்து திரும்பும்போது, அவர்களை அதேபோல் வாகனங்களில் நிலக்கல் பகுதிக்கு அழைத்து வருவதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இதற்கான பணிகள் அனைத்தையும் வரும், 7ம் தேதிக்குள் முடிக்க கலெக்டர் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.