பேட்டராய சுவாமி கோவில் கோபுர தூணில் விரிசல்: பக்தர்கள் அதிர்ச்சி
ஓசூர்: தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும், 8ல் நடக்க உள்ளது. இந்நிலையில், கோபுர தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், பழமையான பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனியில் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். அப்போது, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என, மூன்று மாநிலத்தை சேர்ந்த, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். இந்த ஆண்டு தேர்த்திருவிழா, ஏப்., 7ல் துவங்கி, 9 வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 8ல் தேரோட்டம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கடந்த, 22ல் பால்கம்பம் நடும் நிழ்ச்சி நடந்தது. இந்நிலையில், கோவில் நுழைவு வாயில் பகுதியில் உள்ள ராஜ கோபுர கல் தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏப்.,8ல் தேர்த்திருவிழா நடக்க உள்ள நிலையில், கோவில் கோபுர தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், ஏதும் அசம்பாவித சம்பவம் நடக்குமோ என, தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பழமையான பேட்டராய சுவாமி கோவிலில், சரியான பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படாததால் தான் கோபுர தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக ஒரு தரப்பு பக்தர்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. மேலும், தேன்கனிக்கோட்டை பகுதியை சுற்றியுள்ள கல் குவாரிகளில் வெடி வைக்கும் போது ஏற்படும் அதிர்வு காரணமாக, கோவில் கோபுர தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக மற்றொரு தரப்பு பக்தர்கள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம் கூறியதாவது: இது இப்போது ஏற்பட்ட விரிசல் அல்ல. பல ஆண்டுக்கு முன்பே விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த, இரு மாதத்திற்கு முன், உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேற்கொண்டு விரிசல் ஏற்படுகிறதா என, பேப்பர் ஒட்டி ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை விரிசல் அதிகரிக்கவில்லை. அடுத்த திருப்பணியின் போது, விரிசலை சரி செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.