புகழி மலையில் சூரசம்ஹார விழா!
வேலாயுதம்பாளையம்: புகழி மலை பாலசுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் நடந்த சூரசம்ஹார விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேவர்களை சிறை பிடித்த அசுரர்களை, முருகன் வதம் செய்து தேவர்களை விடுவித்த நிகழ்ச்சியே சூரசம்ஹாரம். கந்த சஷ்டியன்று அனைத்து முருகன் தலங்களிலும் இந்த நிகழ்ச்சி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழா கடந்த 26ம் தேதி துவங்கியவுடன், விரதம் இருப்பவர்களுக்கு விரத காப்பு அணிவித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. 30 ம் தேதி வரை முருகப்பெருமானுக்கு ஸ்வாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டது.சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (31 ம் தேதி) காலை 7 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 12 மணிக்கு விஷேச கால சிறப்பு பூஜையாக நடந்த விழாவில் சஷ்டியை முன்னிட்டு உச்சி கணபதி , ஸ்ரீ பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு, பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உட்பட வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து புகழி மலை அடிவாரத்தில் மாலை 6 மணிக்கு துவங்கிய சூரசம்ஹாரம் விழாவில், காந்திநகர் விநாயகர் கோவில் கந்தம்பாளையம் பிரிவு, வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டான உள்பட நான்கு இடங்களில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு மயில் வாகனத்தில் முருகப்பெருமானின் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு முருகன், வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.