பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.14.67 லட்சம் காணிக்கை
கோபி: கோபி கோவிலில், அதிகாரிகள் தாமதத்தால், உண்டியல்கள் எண்ணும் பணி தள்ளிப்போனது. கோபி பாரியூரில் கொண்டத்து காளியம்மன் வகையறா கோவில்களில், பக்தர்கள் காணிக்கை செலுத்த, பத்து உண்டியல்கள் உள்ளன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இவை திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படும். கடந்த ஜனவரி மாதம் குண்டம் தேர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி நான்கு உண்டியல்கள் கூடுதலாக வைக்கப்பட்டன. நேற்று, 12:00 மணிக்கு உண்டியல்களை திறந்து, காணிக்கை எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர்கள் முருகையா, ஷர்சினி வருவதாக தெரிவிக்கப்பட்டது. காணிக்கை எண்ண, திருப்பூரை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் அழைக்கப்பட்டனர். இவர்கள், 11:30 மணிக்கே வந்தனர். அதிகாரிகள், மாலை, 3:00 மணியாகியும் வரவில்லை. இதனால் தன்னார்வலர்கள் துவண்டு போயினர். மதியம், 3:10 மணிக்கு கமிஷனர்கள் வந்தனர். அதன்பின், உண்டியல்கள் திறந்து, காணிக்கைகள் எண்ணும் பணி தொடங்கியது. தங்கம் 62 கிராம், வெள்ளி 264 கிராம், அமெரிக்க டாலர் ஏழு என மொத்தம் 14.67 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.