உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திரத் திருவிழா: மலைக்கோயிலுக்கு தனிப்பாதை..நெரிசலை குறைக்க ஏற்பாடு

பங்குனி உத்திரத் திருவிழா: மலைக்கோயிலுக்கு தனிப்பாதை..நெரிசலை குறைக்க ஏற்பாடு

திண்டுக்கல்;பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக பழநி மலைக்கோயிலுக்கு செல்ல தனிப்பாதை அமைக்கப்படும் என, கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.பழநி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா குறித்த ஆலோசனைக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை வகித்து பேசியதாவது: பக்தர்களின் வசதிக்காக 42 இடங்களில் நிழல் பந்தல்கள் அமைக்கப்படும். பாதயாத்திரை பக்தர்களுக்கு பேரூராட்சிகள் மூலம் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு 24 மணிநேரம் கணிகாணிக்கப்படும். சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, தேனியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

கோயிலுக்கு தனிப்பாதை: பக்தர்கள் மலைக்கோயில் தரிசனத்திற்கு செல்ல, யானைப்பாதை வழியாக சென்று படிப்பாதை வழியாக இறங்கிவர ஒருவழி பாதையாக மாற்றப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க குடமுழுக்கு நினைவரங்கு வழியாக யானைப்பாதையை இணைத்து தனிப்பாதை அமைக்கப்படும். 145 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எட்டு இடங்களில் உரிமம் பெற்ற 294 முடி இறக்கும் தொழிலாளர்கள் மூலம் முடி எடுக்கும் பணிகள் நடைபெறும், என்றார். டி.ஆர்.ஓ., லதா, சப்-கலெக்டர் வினீத், பயிற்சி கலெக்டர் ஆஷா, இணை ஆணையர் ராஜமாணிக்கம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !