மாகாளியம்மன் கோவில் திருவிழா கிராமங்களில் விழாக்கோலம்
கோத்தகிரி : கோத்தகிரி பேட்லாடா கிராம மாரியம்மன் திருவிழாவில், பத்ரகாளியம்மன் திருவீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம், 12:00 மணிக்கு, நடந்த ஊர்வலத்தில், பத்ரகாளியம்மன் கிராம முக்கிய வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு, 12:00 மணிக்கு, சிறப்பு பூஜையுடன், கத்திகை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், பேட்லாடா சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, காணிக்கை செலுத்தி, அம்மனை வழிப்பட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.
கோத்தகிரி திம்பட்டி மாகாளியம்மன் கோவிலில் இருந்து, கடந்த வாரம் புறப்பட்ட அம்மன் தேர், கடைக்கம்பட்டி, அணையட்டி, சாமில்திட்டு, கடக்கோடு உட்பட, எட்டு கிராமங்களுக்கு கொண்டுச்செல்லப்பட்டு, நேற்று திம்பட்டி கோவிலை வந்தடைந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு பலிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பிறகு, பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றில், நீராடி நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாக்களால், கிராமங்களில் விழாக்கோலம் பூண்டிருந்தன.