உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் பக்தர்களை வரிசைப்படுத்த பெண் ஊழியர்கள்!

திருமலையில் பக்தர்களை வரிசைப்படுத்த பெண் ஊழியர்கள்!

நகரி : திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களை வரிசைப்படுத்த, பெண் ஊழியர்களை நியமிக்க, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக சோதனை அடிப்படையில், நேற்று முன்தினம் பிரதான நுழைவு வாயிலிலிருந்து மூலவர் சன்னிதி வரை, 30 பேர் கொண்ட பெண் ஊழியர் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை, 10.30 முதல் மாலை, 4.30 மணி வரை துணை நிர்வாக அதிகாரி முனிரத்தினம் ரெட்டி, பேபி சரோஜினி மேற்பார்வையில், வரிசையில் நின்ற பக்தர்கøளை ஒழுங்குபடுத்தி, சிரமம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய பெண் ஊழியர்கள் உதவினர். இந்த நடைமுறைக்கு, பக்தர்களிடம் வரவேற்பு கிடைத்தால், தொடர்ந்து தினமும் பெண் ஊழியர்களை ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

சன்னிதியில் தகராறு: திருப்பதி திருமலையில், தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், மூலவர் சன்னிதியில் நிற்கும் பக்தர்களை, ஊழியர்கள் பிடித்துத் தள்ளுகின்றனர். சில நேரங்களில், சுவாமி சன்னிதி முன் பக்தர்களுக்கும், தேவஸ்தான ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, ஏராளமான பக்தர்களிடமிருந்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தினமும் புகார்கள் வருகின்றன. இதையடுத்து, பெண் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தினால், அவர்கள் பக்தர்களிடம் இதமான முறையில் பேசி செயல்படுவர் என்ற நோக்கத்துடன், இம்முறையைத் துவக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !