ராமேஸ்வரம் கோவிலில் புதிய சிலைகளுக்கு சிறப்பு பூஜை!
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோவிலில் பஞ்சலோகத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட பலிநாயகர், ஸ்ரீதேவி சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இக்கோவிலில் சேதமடைந்த சிலைகளை செப்பனிட மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, தங்கத்தினாலான பள்ளியறை சுவாமி(சுகாசனர்) உட்பட பல்வேறு சிலைகள், மற்றும் சுவாமி உலா செல்லும் தங்கம், வெள்ளியால் ஆன வாகனங்களும் செப்பனிடப்பட்டன. இதில் முழுமையாக சேதமடைந்த உற்சவ மூர்த்திகளான பலிநாயகர், பூதேவி சிலைகளுக்கு பதிலாக பஞ்சலோகத்தில் புதிதாக சிலைகள் வடிவமைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு கோவில் சர்வசாதகம் கணபதிராமன், உதயகுமார், சுகுமார் குருக்களால் இரண்டுகால யாக பூஜைகள் செய்யப்பட்டன. இதைதொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு கலச நீரால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதன்பின், காசி விஸ்வநாதர் சன்னிதியில் பலிநாயகர் சிலையும், பெருமாள் சன்னிதியில் பூதேவி சிலையும் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.