மாமன்னன் ராஜராஜசோழனின் ஆயிரத்து 26வது சதய விழா!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் ஆயிரத்து 26வது சதயவிழா நாளை நான்காம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.
இதுகுறித்து சதயவிழாக்குழு தலைவர் தங்கமுத்து கூறியதாவது: மாமன்னன் ராஜராஜசோழனின் ஆயிரத்து 26வது முடிசூட்டு விழா அவர் பிறந்த நாளான ஐப்பசி சதய நட்சத்திரம் அன்று நான்காம் மற்றும் ஐந்தாம் தேதி தஞ்சை பெரியகோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.நான்காம் தேதி காலை ஒன்பது மணிக்கு இறை வணக்கத்துடன் விழா தொடங்குகிறது. காலை பத்து மணிக்கு மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், கலெக்டர் பாஸ்கரன், டி.ஐ.ஜி., ரவிக்குமார், பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் கலந்து கொள்ளும் மேடை நிகழ்ச்சி நடக்கிறது.காலை 11 மணிக்கு மாமன்னனின் மாட்சிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. மாலை மூன்று மணிக்கு ராஜாங்கம், செந்தில்குமார் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி, மாலை 3.30 மணிக்கு களிமேடு அப்பர் அவையினர் திருமுறை இசைத்தல் மற்றும் இன்னிசை பக்தி பாடல்கள், திருமுறை இன்னிசை அரங்கும், மாலை 5.30 மணிக்கு 25 நாதஸ்வரம் மற்றும் 25 தவில் இசைக்கலைஞர்களின் இசை சங்கம நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு காலத்தின் கொடை ராஜராஜன் என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. ஏழு மணிக்கு டாக்ர் சீர்காழி கோவிந்தராஜனின் தமிழிசைப்பாடல்களை சீர்காழி தாசன் பாடுகிறார். தொடர்ந்து பட்டிமன்றம், பாட்டு மன்றம், திருமுறையின் திருநடனம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஐந்தாம் தேதி காலை ஆறு மணிக்கு தர்மராஜ், சேதுராமன் குழுவினரின் நாதஸ்வர இசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. காலை ஆறரை மணிக்கு தவத்திரு அய்யப்ப சுவாமிகள் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியும், ஏழு மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.காலை ஏழே கால் மணிக்கு திருமுறை திருவீதி உலாவும், காலை 8.45 மணிக்கு பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு 34வது ஆண்டாக பேரபிஷேகம் நடக்கிறது. மதியம் ஒரு மணிக்கு பெருந்தீப வழிபாடு நடக்கிறது. மாலை மூன்று மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கி தேவார இசை அரங்கு, பட்டிமன்றம், திருப்பதிக விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.இரவு எட்டு மணிக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், மயிலாடுதுறை எம்.பி., மணியன், தஞ்சாவூர் எம்.எல்.ஏ., ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொள்ளும் மேடை நிகழ்ச்சி நடக்கிறது.இவ்வாறு சதயவிழாக்குழு தலைவர் தங்கமுத்து தெரிவித்தார்.அரண்மனை பரம்பரரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா ஆகியோர் உடனிருந்தனர்.விழாவுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும், குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விழா நடத்த பிராமாண்டமான பந்தல்களும், சிறப்பு மின் அலங்காரங்கும், சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை சதயவிழாக்குழு, அரண்மனை தேவஸ்தானம், தென்னக பண்பாட்டு மையம் இணைந்து செய்து வருகின்றனர்.