இதிகாசங்கள், புராணங்கள் மக்களால் புறக்கணிக்கப்படுகின்றன!
சென்னை : இந்த காலத்தில் இதிகாசங்கள், புராணங்கள் மக்களால் புறக்கணிக்கப்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும், என, பூஜ்யஸ்ரீ சுவாமி ஓங்காராநந்தர் பேசினார். பெண் தர்மம் பற்றி, காஞ்சி மகா பெரியவர் கூறிய கருத்துக்களை உள்ளடக்கிய, "பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும் என்ற புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் நேற்று நடந்தது. இதில், ஸ்ரீ புவவேஸ்வரி அவதூத வித்யா பீடம் பீடாதிபதி பூஜ்ய ஸ்ரீ சுவாமி ஓங்காராநந்தர் புத்தகத்தை வெளியிட, சாஸ்த்ரா பல்கலை துணைவேந்தர் சேதுராமன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், பூஜ்யஸ்ரீ சுவாமி ஓங்காராநந்தர் பேசியதாவது: நாம் அனைவரும், பெற்ற தாயை வணங்க வேண்டும். ஒரு குழந்தையை நல்ல குணத்துடன் தாய் தான் வளர்க்கிறாள். அந்த நல்ல குழந்தை தான், இந்த நாட்டின் நல்ல பிரதிநிதியாகிறது. நல்ல பிரதிநிதியால் தான், நாடும் வளர்ச்சி பெறும்; சுபிக்ஷம் பெறும். இந்த நாடு சுபிக்ஷம் பெற உதவும் பெண்களை வணங்க வேண்டும். இதில், சுவாமி பரமாத்மானந்தா பேசியதாவது: மக்கள் எல்லா மொழிகளையும் கற்கின்றனர். ஆனால், சமஸ்கிருதம் மட்டும் கற்பதில்லை. பகவத் கீதை, வேதங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது. எனவே, அனைவரும் சமஸ்கிருதத்தை கற்க வேண்டும். இந்த காலத்தில் இதிகாசங்கள், புராணங்கள் மக்களால் புறக்கணிக்கப்படுகின்றன. குருகுலக் கல்வியே மறைந்து வருகிறது. இந்நிலை மாற வேண்டும். இவ்வாறு பரமாத்மானந்தா பேசினார். நிகழ்ச்சியில், இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன், மங்கள் தீர்த் எஸ்டேட்ஸ் இயக்குனர் பாலசுப்பிரமணியம், நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.