சபரிமலைக்கு கேரள அரசின் 600 பஸ்கள் இயக்கப்படும்!
திருவனந்தபுரம் : இவ்வாண்டு சபரிமலை சீசன் போது, கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட, 600 பஸ்கள் தயாராக உள்ளன. இவைகள், மாநிலத்தின் பல்வேறு பணிமனைகளில் இருந்து ம்பை, நிலக்கல் பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், இவ்வாண்டுக்கான மண்டல õல உற்சவம், வரும் 16ம் தேதி துவங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உட்பட, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரள்வது வழக்கம். இவ்வாண்டுக்கான உற்சவங்களை ஒட்டி, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பம்பைக்குச் செல்ல பக்தர்களின் வசதிக்காக, கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சில வாரங்கள் முன்னர் வரை, இதற்காக, 500 புதிய பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மூன்றாண்டுகள் இயக்கப்பட்ட, 600 பஸ்களை இதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக பல்வேறு பணிமனைகளில் பழுது நீக்குவதற்காக நிறுத்தப்பட்டுள்ள பஸ்களும் அடக்கம். அய்யப்ப பக்தர்களில், 40 பேர் கொண்ட குழுவுக்கு பஸ் தேவைப்படின், அவர்களுக்காக சிறப்பு சர்வீஸ் நடத்தவும் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் திருவனந்தபுரம் சென்ட்ரல், கொட்டாரக்கரா, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு, மூணாறு, மலப்புரம், சுல்தான்பத்தேரி, காசர்கோடு, குருவாயூர், வளாஞ்சேரி, மைசூரு, பெங்களூரு, கோவை, பம்பை ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு ஆன்-லைன் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியான தேனி மாவட்டம் குமளி மற்றும் கேரள மாநில கோழிக்கானம், உப்புத்தரா, புல்மேடு பகுதிகளில் இருந்து, எருமேலி, பம்பை ஆகிய இடங்க ளுக்கு தொடர் சர்வீஸ் நடத்தப்படும். இதற்காக, 300 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தற்போது சர்வீஸ் நடத்தி வரும் பஸ்களை சபரிமலை சிறப்பு பஸ்களாக இயக்கப்படும் போது அப்பகுதிகளில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.