சிவன் கோவில்களில் வரும் 8ம் தேதி சனிப்பிரதோஷம்
ஊத்துக்கோட்டை: சிவன் கோவில்களில், வரும், 8ம் தேதி, இந்தாண்டின் இரண்டாவது சனிப்பிரதோஷ விழா நடைபெற உள்ளது. சிவாலயங்களில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரதோஷ விழா முக்கியமானது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமிக்கு இரு தினங்களுக்கு முன், திரயோதிசி திதியில், இவ்விழா கொண்டாடப்படும். இதில், சனிக்கிழமை வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு, மொத்தம், 25 பிரதோஷ தினங்கள் உள்ளன. இதில், 5 நாட்கள் சனிப்பிரதோஷ விழா நடைபெற உள்ளது. இந்தாண்டின் முதல் சனிப்பிரதோஷ விழா, கடந்த மாத ம், 25ம் தேதி, சிவன் கோவில்களில் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில், வரும், 8ம் தேதி, நடைபெறும் பிரதோஷம், சனிக்கிழமை வருகிறது. இதையொட்டி, சுருட்டப்பள்ளி கிராமத்தில் சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தாராட்சிலோகாம்பிகா சமேத பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில், காரணி கிராமத்தில் உள்ள காரணீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை வட்டம், மாம்பாக்கம் மார்க்கண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான சிவன் கோவில்களில், பிரதோஷ விழா நடைபெற உள்ளது. மேற்கண்ட கோவில்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.