ராமானுஜர் 1000வது ஜெயந்தி விழா கோவில்களில் கொண்டாட உத்தரவு
திருப்பூர் : ஸ்ரீ ராமானுஜரின், ஆயிரமாவது அவதார தினத்தை, வைணவ கோவில்களில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீ ராமானுஜரின், ஆயிரமாவது அவதார நட்சத்திரம், வரும், மே, 1ல் வருகிறது. அவரது அவதார தினத்தை, வைணவ கோவில்களில் கொண்டாட, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் வீர சண்முகமணி, இணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய உத்தரவு: ஏப்., 21 முதல், மே, 1 வரை, ஸ்ரீ ராமானுஜரின், ஆயிரமாவது அவதார தினத்தை, சிறப்பாக கொண்டாட வேண்டும். ஸ்ரீ ராமானுஜரின் தத்துவம் மற்றும் கொள்கையை விளக்கும் இயல், இசை, நாடகம் என, தினமும் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தமிழக கலை பண்பாட்டை விளக்கும் வகையில், நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பிரசாதங்கள் தயாரித்து வழங்க வேண்டும். அவதார திருவிழாவை சிறப்பாக நடத்தும் வகையில், வைணவ கோவில் களில், ராமானுஜர் வாழ்க்கை வரலாறு, இந்து சமயத்துக்கு அவர் ஆற்றிய ஆன்மிக பணிகள், இயற்றிய நூல்கள், ஸ்ரீ பாஷ்யம், பகவத் கீதை, விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றின் கண்காட்சி, சிறப்பு சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு ராமானுஜர் தொடர்பான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி, பரிசு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.