உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை பெய்ய வேண்டி கடலில் வருண ஜெபம்

மழை பெய்ய வேண்டி கடலில் வருண ஜெபம்

ராமநாதபுரம், வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி சேதுக்கரை கடலில் வருண ஜெபம் நடந்தது. தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவுகிறது. கண்மாய், குளம், ஊரணிகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலை நீங்க வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் ராம நவமியை முன்னிட்டு திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் வருண ஜெபம் நடந்தது. இதை முன்னிட்டு சேதுக்கரை சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று காலை 9:55 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. விநாயகர், முருகன், ராமருக்கு வெண் கடுகு, நாயுருவி, தேன், நெய், பழங்கள், கடுக்காய், அரசு, ஆல் உள்பட 9 மரக்குச்சிகள், நவதானியங்கள், சர்க்கரை, நெல், அரிசி, காசு உள்பட 108 வகை பொருட்கள் போடப்பட்டு யாக பூஜை நடந்தது.

வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தம் கடலில் கலக்கப்பட்டு ராமஜெய மந்திரம் முழங்கப்பட்டது. திருப்புல்லாணி பாலாஜி யாகத்தை நடத்தினார். இதையடுத்து, ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்புல்லாணி, சேதுக்கரை சேது பந்தன யாத்ரா வைதீக சங்க நிர்வாகிகள் மணிகண்டன், அபிராம் உள்பட பலர் செய்தனர். ராமநாதபுரம் அரண்மனை வாசல் பால ஆஞ்ச நேயர் கோயில், குயவன்குடி ஷீர்டி சாய்பாபா ஆலயத்தில் ராம நவமி விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !