நித்யபூஜை திட்டத்தில் கோவில்களுக்கு நிதி கிடைக்காததால் சிக்கல்!
அன்னூர் : நித்ய பூஜை திட்டத்தில் அன்னூர் வட்டாரத்தில் பல கோவில்களுக்கு ஒரு வருடமாக மாதாந்திர தொகை வராததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பூஜை செலவுக்கு போதிய வருவாய் இல்லாத கோவில்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. அரசு சார்பில், 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு, அதன் வட்டியிலிருந்து மாதம் 250 ரூபாய் தினசரி பூஜைக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 11 ஆயிரத்து 930 கோவில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவில் நிர்வாகி பெயரில் வங்கி கணக்கு துவக்கப்பட்டு அதில் வட்டித்தொகை வழங்கப்படுகிறது. பல கோவிலில் நித்ய பூஜை செலவுக்கு இத்தொகை மிகவும் உதவியாக உள்ளது. அன்னூர் வட்டாரத்தில் 25க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு இத்தொகை ஆறு ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படுகிறது. கடந்த ஓர் ஆண்டாக கெம்பநாயக்கன்பாளையம் பிள்ளையார் கோவில், பொன்னே கவுண்டன்புதூர் மாரியம்மன் கோவில் உள்பட பல கோவில்களுக்கு மாதாரந்திர நிதி வரவில்லை என்று, அக்கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.