இடிகரை தர்மராஜர் கோவில் குண்டம் விழா கோலாகலம்
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே இடிகரை தர்மராஜர் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம், இடிகரையில் பழமையான தர்மராஜர் கோவில் உள்ளது. இங்கு, 32 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் திருவிழா பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. ஏப்., 2ல் சக்தி கரகம் எடுத்து வருதல், 3ல் திருக்கல்யாணம், சிரசு ஊர்வலம், சகாதேவன் ஊர்வலம், 10ல் பூ வளர்த்தல், கரக ஊர்வலம் நிகழ்ச்சிகள் நடந்தன. தர்மத்தை நிலைநாட்ட திரவுபதி தன் சபதத்தை உலகுக்கு உணர்ந்தும் விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நேற்று காலை நடந்தது. கோவில் முன், 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட குண்டத்தில் கோவில் பூசாரி முதலில் இறங்கினார். பின், பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக பலர் இறங்கினர். குண்டத்தின் இருபக்கத்திலும் திரளான பக்தர்கள் திரண்டு நின்று, குண்டத்தில் பக்தர்கள் இறங்கும் போது, பக்தி பரவசத்தில், கோவிந்தா! கோவிந்தா! என, கோஷமிட்டனர். காலில் தீக்காயம் பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க கோவில் வளாகத்தில் மருத்துவக் குழு இயங்கியது. பக்தர் ஒருவர் குண்டத்தில் கால் இடறி விழுந்தார். இவர் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இன்று போத்துராஜா காவு நிகழ்ச்சியும், வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டுவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.