உடுமலை மாரியம்மனுக்கு இன்று திருக்கல்யாண வைபவம்
உடுமலை: உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழாவையொட்டி, அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் இன்று நடக்கிறது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கோவிலில், திருவிழா மற்றும் தேரோட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, திருவிழாவுக்கு, கடந்த மாதம் 28ம் தேதி நோன்பு சாட்டப்பட்டது.
திருக்கம்பம் நிலைநாட்டுதல், கொடியேற்றத்துக்கு பிறகு, திருத்தேரோட்டம் நாளை நடக்கிறது. இதையொட்டி, நாள்தோறும், அம்மன் திருவீதி உலா சிறப்பு அலங்காரத்தில், நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு அன்ன வாகனத்தில், அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா நடந்தது. இன்று அதிகாலை முதல், மாவிளக்கு எடுத்து, பக்தர்கள் வழிபாடு செய்யலாம். இன்று மாலை, 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில், அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு மேல், மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4:15 மணிக்கு மேல், திருத்தேரோட்டமும் நடக்கிறது. நகரம் மற்றும் கிராமங்களிலிருந்து பக்தர்கள், நாள்தோறும் கொளுத்தும் வெயிலை கூட பொருட்படுத்தாமல், தீர்த்தம் எடுத்து வந்து திருக்கம்பத்துக்கும், அம்மனுக்கும் செலுத்தி, வழிபாடு நடத்தி வருகின்றனர். தேரோட்டத்துக்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்து அற நிலையத்துறையினர் செய்துள்ளனர். தேரோடும் வீதிகளான தளி ரோடு, தலகொண்டம்மன் கோவில் வீதி, தங்கம்மாள் ஓடை வீதி ஆகிய பகுதிகளில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகள் மற்றும் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.