கோத்தகிரியில் குண்டம் விழா அம்மன் பக்தர்கள் பரவசம்
கோத்தகிரி : கோத்தகிரி கடைவீதி பண்ணாரியம்மன் கோவிலில் பூ குண்ட திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோத்தகிரி பண்ணாரியம்மன் கோவில் பூகுண்ட தேர்த்திருவிழா, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும், ஹோமம் பூஜையுடன், அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு, அம்மன் அழைப்பு நிகழ்ச்சியை அடுத்து, 7:00 மணிக்கு பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள், பெண்கள் உட்பட, விரதம் இருந்த பக்தர்கள் பூகுண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு அபிஷேக பூஜை யும், பகல், 12:00 மணிக்கு அலங்கார ஆராதனை, அமுது வார்த்தல் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை, 9:00 மணிக்கு, அபிஷேக ஆராதனையும், மாலை, 6:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தேர் ஊர்வலம் கடை வீதியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இரவு 10.00 மணிக்கு கோவிலை வந்தடைகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.