கொண்டத்து காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா: குண்டம் இறங்கி பக்தர்கள் வழிபாடு
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூர் கொண் டத்து காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், பல ஆயிரம் பக்தர்கள், நேற்று குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
திருப்பூரை அடுத்த பெருமா நல்லூரில், புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 5ல் துவங்கியது. நேற்று அதிகாலை, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சாவடியில் பொங்கல் வைத்து, குதிரையுடன் படைகலம் கொண்டு வரப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள பரிவார மூர்த்திகள் கன்னிமார், கருப்பராயன், முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு, அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கொண்டத்துக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவில் பூசாரிகள் மனோகரன், முருகானந்தம் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக் கணக்கான பக்தர்கள், மஞ்சள் நிற உடை உடுத்தி, மஞ்சள் நீர் கிணற் றில் குளித்து, வரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். அதன் பின், குண்டத்தில் உப்பு, மிளகு போட்டு, பொங்கல் வைத்தல், மொட்டை போடுதல், கரும்பு படைத்தல் உள்ளிட்ட வேண்டுதல்களை, பக்தர்கள் நிறைவேற்றினர். காலை, 9:00 மணிக்கு, குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அபிஷேக தீபாராதனை, அம்மன் பூதவாகன காட்சி யுடன் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மதியம் அன்ன தானம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, சிம்ம வாகனத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார்; மாலை, 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், திருப்பூர், அவிநாசி, குன்னத்துõர், நம்பியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். பல்வேறு அமைப்புகள் சார்பில், நீர்மோர் வினியோகம், அன்னதானம் உள்ளிட்ட வற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.