உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம்: ஆனந்த புஷ்கரணியில் தெப்போற்சவம்

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம்: ஆனந்த புஷ்கரணியில் தெப்போற்சவம்

பொன்னேரி : பங்குனி பிரம்மோற்சவத்தில், பொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் மற்றும் தெப்போற்சவம் சிறப்பாக நடந்தது. பொன்னேரி, ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் கோவிலில், கடந்த மார்ச் மாதம், 31ம் தேதி முதல், பங்குனி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின், 10ம் நாளான நேற்று முன்தினம், காலை, 6:00 மணிக்கு, நடராஜர் புறப்பாடு, திருவூடலும், பகல், 11:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரியும், மாலை, 7:00 மணிக்கு, திருக்கல்யாண வைபவமும் சிறப்பாக நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, ஆனந்தபுஷ்கரணி திருக்குளத்தில், தெப்போற்சவம் நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், உற்சவ பெருமான் மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்குளத்தினை சுற்றிலும் பக்தர்கள் கூடிநின்று, ஓம் நமச்சிவாயா... ஓம் நமச்சியவாயா... என, கோஷம் எழுப்பினர். பக்தர்கள் வேண்டுதலுக்காக, வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி, திருக்குளத்தில் மிதக்கவிட்டு வழிபட்டனர். தெப்போற்சவம் முடிந்து, இரவு, 10:00 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !