உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்கமாரியம்மா கோவிலில் ஆடு வெட்டி பக்தர்களுக்கு கறி விருந்து

அக்கமாரியம்மா கோவிலில் ஆடு வெட்டி பக்தர்களுக்கு கறி விருந்து

ஓசூர்: ஓசூர் அடுத்த சூளகிரி அருகே, அக்கமாரியம்மா கோவிலில்  ஆடு வெட்டி பூஜை செய்த குடும்பத்தினர், 200 பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறினர். ஓசூர் அடுத்த சூளகிரி மலை பின்புறம், 500 ஆண்டுக்கு முன் சூலேபள்ளி என்ற கிராமம் இருந்தது. இந்த கிராமம் தற்போது கொல்லப்பள்ளி என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் வசித்து வந்த தம்பதி, தங்களுக்கு திருமணமாகி, பத்து ஆண்டுகள் கடந்து விட்ட போதும்,  குழந்தைப் பாக்கியம் இல்லாததால், அப்பகுதியில் உள்ள அக்கமாரியம்மா கோவிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக, சென்ற முஸ்லிம் மதத்தை சேர்ந்த சிலர்,
செம்மறி ஆட்டை பலியிட்டு, பக்தர்களுக்கு கறி விருந்து படைத்தால், குழந்தை பிறக்கும் என, கூறியுள்ளனர். இதுபோல் செய்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது. இதனால் அந்த தம்பதியினர்,
ஆண்டுதோறும் அக்கமாரியம்மா கோவிலில் செம்மறி ஆட்டை அறுத்து, பக்தர்களுக்கு விருந்து படைத்து வந்தனர். அவர்களது காலத்திற்கு பின், அவர்களது வம்சாவழியினர் தொடர்ந்து ஆடுகளை வெட்டி, அக்கமாரியம்மாவுக்கு சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு கறி விருந்து அளித்து வருகின்றனர். நேற்று, நான்கு  செம்மறி ஆடுகளை பலி கொடுத்து, அக்கமாரியம்மாவிற்கு சிறப்பு பூஜை செய்து, 200 பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !