சேலம் கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
சேலம்: ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு தினம் பிறந்ததையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். சேலம், செரிரோட்டில் உள்ள சுகவனேஸ்வரர் கோவிலில்,
அதிகாலை முதல், சிறப்பு வழிபாடு நடந்தது. சுகவனேஸ்வரர் மற்றும் ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, வெள்ளிக்கவசம் மற்றும் சிறப்பு அலங்காரம்
செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர்.
பனமரத்துப்பட்டி, நத்தமேடு சிதம்பரேஸ்வரர் கோவிலில், காலை, 7:00 மணிக்கு, பால், இளநீர், தயிர் மற்றும் பல்வேறு வகை பழங்கள் கொண்டு, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல், மல்லூர் கோட்டைமேடு கோவிந்தராஜ பெருமாள், சுனைகரடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில்,
சிறப்பு அபிஷேகம் நடந்தது. 1,008 திருவிளக்கு பூஜை: இடைப்பாடி, வெள்ளாண்டிவலசில் உள்ள காளியம்மன் கோவிலில், இரவு, திருவிளக்கு பூஜை நடந்தது. மழை பொழியவும், மக்கள் சுபிட்சமாக வாழவும், 1,008 திருவிளக்குகள் மூலம், பூஜை செய்யப்பட்டது.
இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர், வெள்ளார் நாயக்கன்பாளையம் பசுபதீஸ்வரர், மூக்கரை நரசிம்ம பெருமாள், கவுண்டம்பட்டி மாரியம்மன் ஆகிய கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.
கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன், சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் உள்ள பழமையான சென்றாய பெருமாள் கோவிலில் உள்ள வீரபக்த ஆஞ்சநேயருக்கு, பால், தயிர், இளநீர் உள்பட, 16 வகைப் பொருட்களால் அபி?ஷகம்
செய்யப்பட்டது. தொடர்ந்து, மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, வெள்ளிக் கவசத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளினார். அதேபோல், ஆட்டையாம்பட்டி கந்தசாமி கோவிலில், வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் கந்தசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு
அருள்பாலித்தார்.
உலக நன்மை வேண்டி... : ஆத்தூர், கோட்டை சம்போடை வனத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலில், ஏராளமான பெண்கள், மழை பெய்யவும், உலக நன்மை வேண்டியும், விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். மதுரகாளியம்மன், வெள்ளிக் கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆத்தூர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர், ராஜ சிறப்பு அலங்காரத்தில்
அருள்பாலித்தார். மேலும், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், வெங்கடேச பெருமாள், வெள்ளை விநாயகர், கைலாசநாதர், திரவுபதி அம்மன், வீரஆஞ்சநேயர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில்களில், சிறப்பு பூஜை,
வழிபாடு நடந்தது.
அலகுகுத்தி...: பெத்தநாயக்கன்பாளையம், பனமடல், கூத்தாண்டவர் கோவிலில், அதிகாலை, 4:30 மணியளவில், கூத்தாண்டவர் கண்திறப்பும், அரவான் பூஜை நடந்தது. 9:00 மணிக்கு மேல், திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில், கூத்தாண்டவர், சின்னம்மாள், பெரியம்மாள் சுவாமிகள் ஊர்வலமாக வந்தனர். மாலை, 5:00 மணிக்கு மேல் நடந்த அலகுகுத்துதலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கொட்டவாடி, மகாசக்தி மாரியம்மன் கோவிலில், நாளை, சித்திரை திருவிழா துவங்குகிறது. காலை, 7:00 மணிக்கு சக்தி அழைத்தல், மதியம், 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நாளை மறுநாள் மதியம், 12:00 மணிக்கு மழைவேண்டி கூழ்படைத்தல், மாலை, 5:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. 18 காலை, 10:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தல் நடக்கிறது.