புனித வெள்ளியை முன்னிட்டு சர்ச்களில் சிலுவைப்பாதை
நாமக்கல்: நாமக்கல்லில், புனித வெள்ளியை முன்னிட்டு சர்ச்களில், சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.நாமக்கல் - திருச்சி சாலையில் கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தவக்காலம் எனும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்தாண்டு, கடந்த, 9ல் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்தவர்கள் குருத்தோலையை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கடந்த, 13ல் புனித வியாழன் நிகழ்ச்சி நடந்தது. பங்குத் தந்தை பிரான்சிஸ் தலைமை வகித்தார். தொடர்ந்து பாதம் கழுவுதல் மற்றும் திவ்ய நற்கருணை ஆராதனை நடந்தது. நேற்று
புனித வெள்ளி நிகழ்ச்சி நடந்தது. இதில், 14 நிலைகளாக சிலுவைப்பாதை நிகழ்ச்சியும், மாலை, 6:15 மணிக்கு திருச்சிலுவை ஆராதனையும் நடந்தது. இன்று மாலை, 6:00 மணிக்கு ஒப்புரவு
அருட்சாதனம், இரவு, 11:30 மணிக்கு ஒளி வழிபாடு நடைபெறுகிறது. பங்குத்தந்தை பிரான்சிஸ், ஆரோக்கிய டேவிட் தலைமை வகிக்கின்றனர். அடுத்து இறைவாக்கு வழிபாடு
நடைபெறுகிறது. நாளை இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நடக்கிறது.