உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொருள் மாறிய தமிழ்ப் பழமொழிகள்!

பொருள் மாறிய தமிழ்ப் பழமொழிகள்!

மக்களிடையே புழங்கி வரும் தமிழ்ப் பழமொழிகளில் காலத்தால் உருமாறி சிதைந்து, அவற்றின் உண்மையான பொருளுக்கு நேர்மாறான பொருளைத் தரும் அளவுக்கு மாற்றம் கண்டுவிட்டன. வாரியார், குன்றக்குடி அடிகள், புலவர் கீரன், கவிஞர்  கண்ணதாசன் போன்றோர் அவ்வப்போது மேடைகளிலும், எழுத்துக்களிலும் அவற்றின் உண்மைத் தன்மையை பதிவு செய்துவிட்டு  சென்று உள்ளனர். அவர்களது விளக்கங்களால் புரிந்து கொண்ட

மெய்ப்பொருள் இதோ...

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்ற ஓர் உன்னதமான பழமொழி. தெய்வ நம்பிக்கையையும் கருவுறுதலை யும்  தொடர்புபடுத்தும் இப்பழமொழி, இன்று அடுப்பங்கரை விவகாரமாகி விட்டது விந்தை தான். சஷ்டி விரதத்தை பெண்கள் ஒழுங்காய்  மேற்கொண்டால், அவர்களது கருவறை எனப்படும் அகப்பையில் குழந்தை வளரும் என்பது தான் இப்பழமொழியின் உண்மை  பொருளாகும்.

அரசனும் புருஷனும்

இதேபோல் பெண்களின் (மூட) நம்பிக்கையையும் கருவுறுதலையும் தொடர்புபடுத்தும் மற்றொரு பழமொழி. அரசனை நம்பி புருஷனைக்  கைவிட்ட கதை, என்பதாகும். பெண்ணின் ஒழுக்க நெறிக்கும் இப்பழமொழிக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. அரச மரத்தைச் சுற்றி  வந்தால் கரு உருவாகும் என்பது அக்கால பெண்டிரின் அதீத நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் ஊறிப்போன பெண்கள் சிலர் இரவும்  பகலும் தன் கணவரை தன்னருகே அண்ட விடாது அரச மரத்தை மட்டுமே சுற்றிச்சுற்றி வந்தனர். அவர்களை கேலி செய்து,  குத்திக்காட்டி நல்வழிப்படுத்த உருவான பழமொழி தான் இது.

கர்ணனும் ஈகையும்

ஆறிலும் சாவு; நுாறிலும் சாவு என்பது எண்ணிக்கையை குறிக்கும் பழமொழியே அன்று வயதைக் குறிக்கும் பழமொழியன்று. இது  வயதை குறிக்கிறது என்கிற தவறான புரிதலினால் நீல வானம் படத்தில் பாலசந்தர் ஆறில் சாகலாம் – அது அறியாத வயது; நுாறில்  சாகலாம் – அது அனுபவித்து ஓய்ந்த வயது. ஆனால் பதினாறில் சாகலாமா, என வினா எழுப்புவார். உண்மையில் மகாபாரதத்தில்  கர்ணன் பேசும் கூற்று அது. கர்ணனை தனது மகன் எனத் தெரிந்து கொண்ட குந்தி, அவனை தன் தம்பிகளோடு சேர்ந்து வாழ  அழைக்கும் போது, ரத்தப் பாசத்தைக் காட்டிலும் நட்பை பெரிதாய் மதித்த கர்ணன் உதிர்த்த முத்துக்களே அப்பழமொழி.

ஐந்து தம்பியரோடு சேர்ந்து ஆறாவதாக நான் போரிட்டாலும், நுாற்றுவராகிய கவுரவர்களுடன் இணைந்து போரிட்டாலும் எனக்கு சாவு  உறுதி என்பதைத்தான் கர்ணன் அதன் மூலம் விளக்குகின்றானே தவிர வயது பற்றி அவன் குறிப்பிடவில்லை.

நமச்சிவாய மந்திரம் இறை நாமத்துடன் தொடர்பு உடைய அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை என்ற பழமொழி பிள்ளைகளின்  எண்ணிக்கையை குறிப்ப தாய் திரிந்து விட்டது. சிவாய நம அல்லது நம சிவாய என்ற ஐந்தெழுத்து இறை நாமத்தை ஜெபித்து  கொண்டேயிருக்க வேண்டும். அதற்கு நேரமோ, மனமோ, அறிவோ இல்லாதவர்கள் குறைந்தபட்சம் சிவ, சிவ என்ற இரண்டெழுத்து  மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அதுதான் அஞ்சுக்கு ரெண்டே தவிர தனக்கு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அல்ல (தற்காலத்தில் பலருக்கு ஐந்து பிள்ளைகள் இல்லை என்பது வேறு விஷயம்).

இறை நம்பிக்கையுடன் தொடர்பு கொண்ட இன்னொரு பழமொழி அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் என்பது. அதில்  அடி என்பது அடித்து துன்புறுத்துவது கிடையாது. மாறாக இறைவன் திருவடி என்பதே பொருளாகும். அந்த இறைவனது திருவடி  உதவுவது போல் உடன் பிறந்தார் உட்பட யாருமே உதவ முடியாது என்பது அது பறை சாற்றும் உண்மை.

வேல் விழி; மான் விழி பொருள் திரிந்து விட்டமற்றொரு பழமொழி வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை; போக்கத்தவனுக்கு போலீஸ்  வேலை என்பது. வாக்குகற்றவனுக்கு வாத்தியார் வேலை. போக்கை கற்றவருக்கே போலீஸ் வேலை என்பது அதன் பொருள்.

பெண்ணின் சாமுத்திரிகா லட்சணத்தை சொல்லும் சேலை கட்டிய மாதரை நம்பாதே என்ற பழமொழி. இது பெண்ணின் உடையை  பற்றிகூறுவதாய் திரிந்து விட்டது. மீனின் கண் போன்ற சிறு விழி (கயல் விழி), மானின் மகுண்ட பார்வை (மான் விழி), கூரான பார்வை  (வேல் விழி) போன்றவை பெண்ணுடைய கண்ணுக்கான சாமுத்திரிகா லட்சணம் என்று கூறப்படுகிறது. இவற்றுக்கு மாறாக அகன்ற  விழிகளை உடைய (சேல் (கண்) மற்றும் அகட்டிய) பெண் நம்பிக்கைக்குரியவள் அல்ல என்பது அந்தக்கால கூற்று (இதை ஏற்பதும்  ஏற்காததும் அவர் நம்பிக்கை மற்றும் அனுபவத்தை பொறுத்தது).

திருமூலர் பாடல் வரி
காலப்போக்கில் முற்றிலும் சிதைந்து உண்மையானஅர்த்தத்துக்கு சற்றும் சம்பந்தமில்லா பொருளை தரும் வகையில் உருமாறி விட்ட  மற்றொரு பழமொழி கல்லைக் கண்டால் நாயை காணோம்; நாயை கண்டால் கல்லைக் காணோம் என்பதே. நாயை விரட்ட கல்லை  தேடுவதும் கல் கிட்டும் போது நாய் ஓடி விடுவதையும் குறிப்பதல்ல அப்பழமொழி. கைதேர்ந்த சிற்பியின் கை வண்ணத்துக்கு  வழங்கப்பட்ட சான்றிதழே அப்பழமொழி. கல்லில் வடிக்கப்பட்ட நாயின் சிலையை கலைக்கண்ணோடு நோக்கினால் அங்கே கல்லைக்  காணவியலாது; கல்லை மட்டும் காண்போருக்கு நாய் வடிவம் தென்படாது. இந்த பழமொழியின் மிகச்சரியான எதிரொலி தான் கவிஞர்  கண்ணதாசனின் சாகாவரம் பெற்ற பாடல் வரிகள், தெய்வம் என்றால் அது தெய்வம்; வெறும் சிலை என்றால் அது சிலை தான்  (பார்த்தால் பசி தீரும் படப்பாடல்).

களவும் கற்று மற
சாப்பாட்டு பிரியர்கள் சம்பந்தப்படுத்துவது போல் தோன்றும் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்னும் பழமொழி சாப்பாட்டு பிரியர்களை அல்ல; தீவிர இறை பக்தர்களை முன்னிறுத்தி சொல்லப்பட்டதாகும். தமிழ்நாட்டு கோயில்களிலே ஒன்றில் மட்டும்  இறைவனுக்கு சோற்றால் அபிஷேகம் செய்யப்படுவதாகவும், அதை பக்தியுடன் கண்ணுறும் பக்தர்களுக்கு சொர்க்கம் நிச்சயம்  என்றஐதீகத்தின் அடிப்படையில் எழுந்ததே இப்படிமொழி. அனைத்து பழமொழி களின் பொருள் மாற்றத்துக்கும் உச்சமாய்த் திகழ்ந்து  எதிர்மறை பொருளை தரும் பழமொழி களவும் கற்று மற என்பதே. திருட்டுக்கும் இப்பழமொழிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

பழந்தமிழ் சமூகத்தில் இல்லறவியல் – களவியல், கற்பியல் என இரு கூறாகப் பிரித்து அணுகப்பட்டது. திருமணத்துக்கு முன்னரே  காதல் வசப்பட்ட ஒருவர் தோழன் தோழியுடனோ, தனித்தோ சந்தித்து உரையாடி உறவாடி தமது காதலை வளர்த்து உறுதிப்படுத்துவதே  களவியல் எனப்படும்.

பழமொழி சொல்லும் பாடம்: அன்றைய தமிழர் வாழ்வில் காதலும், வீரமும் இரண்டறக் கலந்திருந்ததால் ஒவ்வொருவர் வாழ்விலும் களவொழுக்கம் பேணப்படுதல்  தவறு என குறிப்பிடாதது மட்டுமல்ல, அதை வலியுறுத்தியும் புனையப்பட்டதே இப்பழமொழி. களவொழுக்கத்தை பேண வேண்டும். ஒரு  முறையே பேண வேண்டும். திருமணத்துக்கு பின் கற்பியலுக்கு மாற வேண்டும். பிறன் மனை நோக்கா பேராண்மை வேண்டும்,  ஒருவனுக்கு ஒருத்தி என்றே வாழ வேண்டும். என்ற பண்புகளை வளர்த்து கொள்ளும் விதமாகத் தான் களவொழுக்கம் அல்லது  களவியல் எனப்படும் களவை கற்றுக்கொள். ஆனால் திருமணத்துக்கு பின் அதை முற்றிலுமாய் மறந்து விடு என வலியுறுத்துவதே  இப்பழமொழி. பழமொழிகளின் உண்மை பொருளை உணர்ந்து மகிழ்ந்து பயன்படுத்தினால், அதில் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற  அர்த்தங்களை உணர்ந்து மகிழலாம்... அதற்கேற்ப வாழக் கற்றுக்கொள்ளலாம். – பேராசிரியர் ஹூதாகான் (ஓய்வு) மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !