உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் மாரியம்மன் தேர்த்திருவிழா கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

குன்னூர் மாரியம்மன் தேர்த்திருவிழா கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

ஊட்டி : ஊட்டி, குன்னுாரில் உப்பு மழை யில் நடந்த மாரியம்மன் தேர்திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஊட்டி மாரியம்மன் கோவிலில், மாரி, காளி, காட்டேரி என முப்பெரும் தேவியர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். நுாற்றாண்டுகள் பழைமை வாய்ந்த சந்தைக்கடை மாரியம்மன் கோவில் என பெயர் பெற்றுள்ளது. கடந்த மார்ச், 17ல் பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கிய திருவிழாவில், நாள்தோறும் பல்வேறு ஆன்மிக அமைப்பினர், உபயதாரர்கள் சார்பில் அம்மன் தேர் ஊர்வலம் நடத்தப்பட்டது. நேற்று நடந்த தேர்திருவிழாவை, மதியம், 1:59 மணிக்கு, கலெக்டர் சங்கர், எஸ்.பி., முரளிரம்பா ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.

திரளாக பங்கேற்ற பக்தர்கள், தங்களின் வேண்டுதல்களுக்காக, பூஜை கொடுத்தும், திருத்தேரின் மீது, உப்பு வீசியும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். முன்னதாக, விநாயகர், கிருஷ்ணர், அம்மன் என பல்வேறு தெய்வங்களின் சிறிய தேர்கள் அணிவகுத்து சென்றன. பலரும் அம்மன் உள்ளிட்ட வேடமணிந்தும், அலகு குத்தி தேர் இழுத்தும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

குளிர்வித்த திடீர் மழை: பக்தர்களை குளிர்விக்கும் வகையில், மாலையில் சிறிது நேரம் மழை பெய்ததால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். விழாவையொட்டி போக்குவரத் தில் மாற்றங்கள் செய்யப்பட்டது. மார்க்கெட் சுற்றுப்புற பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கவில்லை. பல்வேறு சிறிய கடைகள் அமைக்கப்பட்டு விற்பனையும் அமோகமாக இருந்தது. பல்வேறு ஆன்மிக அமைப்புகளை சார்ந்தவர்கள் அன்னதானம் வழங்கினர். கோவில் நிர்வாகிகள் கூறுகையில், கோவிலில் துவங்கி மார்க்கெட், புளூமவுண்டன், கமர்சியல் சாலை, லோயர் பஜார், மெயின் பஜார் வழியாக, ௩ கி.மீ., துாரத்தில் ஆங்காங்கே தேரை நிறுத்தி பூஜைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மதியம் துவங்கும் ஊர்வலம் அடுத்த நாள் காலை ௭:௦௦ மணியளவில்தான் கோவிலை அடைவது சிறப்பு அம்சமாகும் என்றனர்.

இன்று நீலாம்பிகை அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம் நடக்கிறது. நாளை ஊஞ்சல் உற்சவம், 21ல், விடையாற்றி உற்சவம் நடக்கிறது. இவ்விழாவுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குன்னுார் தந்திமாரியம்மன் கோவிலில் கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தினமும் தேர் ஊர்வலம் நடந்து வருகிறது. நேற்று பகல், 12:30 மணிக்கு, குன்னுார் ஆர்.டி.ஓ., கீதா பிரியா திருத்தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். முன்னதாக, காலை, 9:00 மணிக்கு வி.பி., தெருவில் இருந்து ஆஞ்சநேயர் ராவணனை வதம் செய்யும் விஸ்வரூபங்கள் ஊர்வலம், சிங்காரி மேளம், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், காலாட்டம், அம்மன்ஆட்டம், கருப்பசாமி ஆட்டம், பேண்ட் வாத்தியம், மங்கள இசை உடன் அலங்கார ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை தாசப்பளஞ்சிக குழுவினர், சினேகிதிகள் அமைப்பு, ஆன்மிக அமைப்புகளை சேர்ந்தவர்கள் செய்தனர். இன்று, 88 வது ஆண்டு பரிவேட்டை உற்சவம் நடக்கிறது. 20ம் தேதி மஞ்சள் நீராடல், 21ல், முத்துப்பல்லக்கு, 22ல், புஷ்ப பல்லக்கு நடக்கிறது. தொடர்ந்து தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் அம்மன் ஊர்வலம் நடத்தப்படுகிறது. மே மாதம், 12ல் மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !