உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் நளன் குளம் மக்களுக்கு அர்ப்பணிப்பு!

திருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் நளன் குளம் மக்களுக்கு அர்ப்பணிப்பு!

காரைக்கால் : திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் 6 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட நளன் குளம் நேற்று மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருநள்ளாரை மேம்படுத்தி பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க கோவில் நகர திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் முதற்கட்டமாக நளன் குளத்தை ஆழப்படுத்தி புனரமைக்கும் திட்டம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. 6 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்ட இத்திட்டத்தில் முதற்கட்டமாக நளன் குளம் ஆழப்படுத்தப்பட்டு, படித்துறைகளில் பக்தர்கள் வழுக்கி விழாத வகையில் கிராணைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே வரும் டிசம்பர் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ளதால் கோவிலுக்கு தற்போதே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வர துவங்கிவிட்டனர். நளன் குளம் புனரமைக்கும் பணிக்காக பிரம்ம தீர்த்ததில் பக்தர்கள் நீராடி வந்தனர். தற்போது நளன்குளம் பணி முடிந்துவிட்டதால் நேற்று காலை நளன்குளம் பக்தர்களுக்காக அர்பணிக்கப்பட்டது. இதற்காக நேற்று காலை 4.30 மணிக்கு நளன்குளத்தில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு குளம் பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிவா எம்.எல்.ஏ., கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், ராஜாசாமி குருக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று காலை முதல் நளன் குளத்தில் பக்தர்கள் நீராடி சனி பகவானை தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !