குற்றாலம் அருகே இந்து கோயில் கட்டி வரும் கிறிஸ்துவர்!
குற்றாலம் : குற்றாலம் அருகே கிறிஸ்தவர் ஒருவர் இந்து கோயிலை கட்டி வருவது சுற்றுவட்டார பகுதி மக்களை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குற்றாலம் அருகேயுள்ள வல்லம் கிராமத்தில் வசித்து வந்தவர் பத்ரிநாதன். இவரது மூத்த மகன் ஜெயபதி (48). இவர் பீடிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். பட்டதாரி. பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த இவர் இயேசுவையும், மாதாவையும் தவறாமல் வணங்கி வந்தது மட்டுமல்லாமல் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு பைபிளில் உள்ள அத்தனை வசனங்களையும் அதன் அர்த்தங்களையும் தெளிவாக விளக்கி கூற கூடியவர். கடந்த 3 ஆணடுகளுக்கு முன் கேரள மாநிலத்தில் குடி கொண்டிருக்கும் மடப்புரம் காளி இவரது கனவில் தோன்றி வல்லம் ஐந்தருவி ரோட்டில் ஒரு மா தோப்பை காட்டி அந்த இடத்தை விலைக்கிரையமாக வாங்கி தனக்கு ஒரு கோயில் கட்டி வழிபட வேண்டும் என கூறியதின் அடிப்படையில் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். காவி வேட்டியுடனும், தாடியுடனும் காணப்படும் இவர் செயல்களை கண்டு சுற்றுவட்டார பகுதி வாழ் மக்கள் ஆச்சிரியத்துடன் இவர் கட்டி வரும் கோயிலை பார்த்து செல்கின்றனர். மேலும் இவர் அர்த்தமுள்ள இந்து மதத்தில் துவங்கி இந்து ஆன்மீக விஷயங்களையும் அலசி ஆராய்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.