புனித மகிமை மாதா திருத்தல திருவிழா
பொன்னேரி : பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில், 502வது திருவிழா நேற்று முன்தினம் மாலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில், ஆண்டுதோறும் ஈஸ்டர் முடிந்து, இரண்டாம் வாரத்தில் ஆடம்பர தேர் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு, 502வது திருத்தல திருவிழா, நேற்று முன்தினம் மாலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட அன்னையின் கொடி, பக்தர்களின் கரகோஷத்துடன் ஏற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறைவனின் அழகு இயற்கையின் அழகு, பச்சை நிறங்கள் பலப்படுத்தும் உறவுகள், மாசற்ற காற்று மாதவனின் ஊற்று, வாழ்வு தரும் தண்ணீர் வற்றாத மழைநீர், அனைவருக்கும் உணவு ஆண்டவனின் கனவு போன்ற தலைப்புகளில், இம்மாதம், 28ம் தேதி வரை, தினமும், மாலை, 6:00 மணிக்கு திருப்பலிகள் நடைபெறுகின்றன. இம்மாதம், 29 மற்றும் 30ல், மகிமை மாதா தேர் திருவிழா நடைபெறுகிறது.