சூரமங்கலம் சித்திரை திருவிழா கோலாகலம்
சூரமங்கலம்: சித்திரை திருவிழா முன்னிட்டு, இரும்பாலை, சர்க்கார்கொல்லப்பட்டி, பாறை வட்டம் காளியம்மன் கோவிலில், நேற்று காலை, 11:00 மணியளவில் பத்ரகாளியம்மன் பவனிவர, பக்தர்கள், சக்தி, பூங்கரகம் எடுத்துவந்தனர். அப்போது, சிலர் அலகுகுத்தியும், இருவர் காளி வேடம் அணிந்தும், ஆடியபடி ஊர்வலம் வந்தனர். பின், கோவில் அருகே, பக்தர்கள் பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். மதியம், 1:00 மணிக்கு, அம்மன்
புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். 4:00 மணிக்கு, சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதியுலா, இரவு, 7:00 மணிக்கு, தாலாட்டு ஊஞ்சல் உற்சவ சேவை நடந்தது. முகூர்த்தக்கால் நடல்: சித்திரை பிரம்மோற்சவ விழா தொடக்கமாக, செவ்வாய்ப்பேட்டை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 9:00 மணியளவில், 13 அடி உயர மூங்கில் கொம்புக்கு, மஞ்சள், குங்குமம் சகிதமாக, மாவிலை தோரணம் கட்டி, பூஜை செய்து, முகூர்த்தக்கால் நடப்பட்டது. பின், மூலவர் சுந்தரேஸ்வரர், மீனாட்சி தாயார், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.