ராமானுஜர் ஆயிரமாவது விழா அகோபில மடத்தில் சிறப்பு பூஜை
காஞ்சிபுரம் : ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் அகோபில மடத்தில், ஜீயர் முன்னிலையில் இன்று சிறப்பு பூஜை துவங்குகிறது.ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா அனைத்து வைணவ கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், அகோபில மடத்தின் சார்பிலும், பல்வேறு இடங்களில் ராமானுஜர் அவதார விழா கொண்டாடப்படுகிறது.
அதன் நிறைவாக, காஞ்சிபுரம் பெருமாள் கோவில் சன்னதி தெருவில் உள்ள அகோபில மடத்தில், இன்று காலை, 7:30 மணிக்கு சிறப்பு பூஜை துவங்குகிறது. அதில், அகோபில மடத்தின், 46ம் பட்டம் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீவன் சடகோப ரங்கநாதயேந்திர மகாதேசிகன் பங்கேற்று, பூஜை செய்கிறார்.
ஜீயர் சுவாமிகள் கூறியதாவது:
எங்கள் மடத்தின் சார்பாக, ராமானுஜர் அவதார விழா ஒவ்வொரு பகுதிகளிலும் கொண்டாடி வருகிறோம். கடந்த ஆண்டு சித்திரை மாதம் துவங்கினோம். கர்நாடகாவில்திருநாராயணபுரம்,
தமிழகத்தில், ஸ்ரீரங்கம், திருவந்திபுரம், திருவள்ளூர், தாம்பரம் மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், பூஜை செய்து வந்தோம். ராமானுஜர் எடுத்துரைத்த உபதேசங்களை பக்தர்களுக்கு
தெரிவிக்கிறோம்.கடந்த மாதம், அவர் அவதரித்த பூமியில் பூஜை செய்தோம். நிறைவு விழாவை அவர் வேதம் படித்து வாழ்ந்த காஞ்சிபுரத்தில் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு ஜீயர் சுவாமிகள் கூறினார்.
இன்று காலை, 7:30 மணிக்கு பூஜை துவங்கப்பட்டு, மூன்று வேளையும் நடக்கிறது. வரும் மே, 1ம் தேதியுடன், ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா நிறைவு பெறுகிறது.