ராஜாபாளையம் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ராஜாபாளையம்: கரிகட்டாம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சேலம், வீரபாண்டி ஒன்றியம், ராஜாபாளையம் பஞ்சாயத்து, கரிகட்டாம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 28
காலை, 7:00 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, மூன்று நாட்களாக, யாக குண்டங்களுக்கு பூஜை, வாஸ்து பூஜை, கிராம தேவதைகளுக்கு பலி பூஜை ஆகியவை
நடந்தது. நேற்று, நான்காம் கால பூஜை முடிந்து, புனிதநீர் நிரப்பப்பட்டு, யாக குண்டத்தில் வைக்கப்பட்டிருந்த கலசங்களுக்கு பூர்ணாஹூதி முடிந்து, தீபாராதனை செய்யப்பட்டது. காலை, 9:00 மணிக்கு, யாகசாலையில் இருந்து புனிதநீர் நிரம்பிய கலசங்கள், கோவிலை மூன்றுமுறை வலம் வந்து, 9:30 மணிக்குமேல், வலம்புரி விநாயகர், வேம்பரசு விநாயகர், நவக்கிரகங்கள், கடகடம்பான் மற்றும் ஓங்காளியம்மன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சக்தி மாரியம்மன் கருவறை கோபுர கலசங்களுக்கு, சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். கோபுர கலசங்களுக்கு புனிதநீர்
ஊற்றும்போது, கோவில் முன் திரண்டிருந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஓம்சக்தி, பராசக்தி கோஷம் எழுப்பி அம்மனை வழிபட்டனர். கோபுர கலசங்களுக்கு பின், மூலவர் அம்மனுக்கும்
கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.
* காடையாம்பட்டி தாலுகா, மரக்கோட்டை அருகே, ஒண்டிவீரனூரில், விநாயகர், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு, நேற்று முன்தினம், மஹா கணபதி ஹோமத்தை
தொடர்ந்து, காலையில் தீர்த்தக்குடம், மாலையில் மஹா பூர்ணாஹூதி, அஷ்டபந்தனம் சாற்றுபடி நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, மூலஸ்தன கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், காருவள்ளி, சின்னத்திருப்பதி, மரக்கோட்டை, ஒண்டிவீரனூர் கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.
* கொளத்தூர் ஒன்றியம், மூலக்காடு பஞ்சாயத்து, அச்சங்காட்டில், புதிதாக கட்டப்பட்ட வேதநாயகி, நெல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதில், மேட்டூர் தாலுகாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.