திருச்செங்கோடு மலைக்கோவில் வழித்தடத்தில் கடைகள் ஆக்கிரமிப்பு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், போக்குவரத்து வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள தற்காலிக நடை பாதை கடைகளால் பக்தர்கள்
அவதிக்குள்ளாகியுள்ளனர். திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ காலங்களில் பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்து செல்கின்றனர்.
அறநிலையத்துறை சார்பில், கோவிலில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால், தகரத்தில் மேற்கூரை அமைத்து தற்காலிக கடைகளில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. நடைபாதையை ஆக்கிரமித்துள்ள தற்காலிக கடைகளால் பக்தர்கள் விபத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர். இரு சக்கர வாகனங்களை பார்க்கிங் செய்து, வழித்தடம் இல்லாத நிலை உருவாகி விடுவதால், வயதான
பக்தர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, கடைகளுக்கு அளவு நிர்ணயித்து வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றி, பக்தர்களை விபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். மேலும், வழித்தடத்தில் டூவீலர்கள் நிறுத்துவதையும் தடை செய்ய வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.