நாமக்கல் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கோலாகல துவக்கம்
நாமக்கல்: நாமக்கல் அருகே, முத்து மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது. நாமக்கல் - திருச்சி சாலையில் பொன்விழா நகர் அமைந்துள்ளது. இங்குள்ள முத்து மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. மதியம் 1:00 மணிக்கு ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், மாலை, 5:30 மணிக்கு எல்லையம்மன் கும்பிடுதல், காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. வரும், 7 மாலை, 6:00 மணிக்கு தேரில் கலசம் வைத்தல், சக்தி அழைத்தல் நடைபெறுகிறது. இரவு, 8:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அலங்கரிக்கப்பட்ட
ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கும். மே, 8 காலை, 9:00 மணிக்கு பூக்குழி வெட்டி பூஜை செய்து, பூ விடுதல்; காலை, 11:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. மே, 9 காலை, 8:30
மணிக்கு மாரியம்மன் ரதம் ஏறுதல், 2:00 மணிக்கு கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்தல் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு திருஊஞ்சல் வைபவம் நடக்கவுள்ளது. மே, 10 காலை, 11:00 மணிக்கு கம்பம் ஆற்றில் விடுதல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மக்கள் செய்து வருகின்றனர்.