ஓசூர் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த தளி அருகே உள்ள பெல்லூர் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேன்கனிக்கோட்டை அடுத்த தளி அருகே உள்ள பெல்லூர் கிராமத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால்,
பெல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் உதவியுடன் கோவில் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, கோவில் கும்பாபி?ஷக விழா கடந்த, 28 ல் துவங்கியது. அன்று மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞ விஸ்வகேராதனை, பகவத் வாசுதேவ புன்யாஹ, விருத்சங்கரஹன, யாகசால பிரவேசம், அங்குரார்பனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 29 மாலை, 6:30 மணிக்கு, சுப்ரபாதம், வேதபாராயணம், நித்யாய சந்தான கலசாராதனை, துவராதோரணம், மகா மங்களாரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு, சுப்ரபாதம், இண்டிகா பூஜை, கலசாராதனை உள்ளிட்ட
நிகழ்ச்சிகளும் நடந்தன. காலை, 10:00 மணிக்கு, 108 கலசங்களில் புனித நீர் ஊற்ற, பெங்களூரு கனகபுரா சிவருத்ர சுவாமிகள், நாகசந்திரம் மடம் சித்தலிங்க சுவாமிகள், கோவில் தர்மகர்த்தா
சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில், கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.