உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரவணப் பொய்கை புனிதம் காப்பது எப்போது? கிடப்பில் சுற்றுலா துறை செயலர் உத்தரவு

சரவணப் பொய்கை புனிதம் காப்பது எப்போது? கிடப்பில் சுற்றுலா துறை செயலர் உத்தரவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையின் புனிதம் காப்பதற்கு கோயில் நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் எப்போது பணிகள் துவக்கப் போகின்றனவோ என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கை, புதிய படிக்கட்டுகள் அருகில் மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கிருந்து தினமும் தீர்த்தம் எடுத்துச்சென்று கோயில் கொடி மரம், அருகிலுள்ள பலி பீடத்திற்கு அபிஷேகம் செய்யப்படும். கோயில் கொடியேற்ற திருவிழாக்களின் போது கடைசி நாளன்று சரவணப் பொய்கை தண்ணீரில் சுவாமி தீர்த்த உற்சவம் நடக்கும்.

கோயில்களில் கும்பாபிஷேகத்திற்காக சரவணப் பொய்கை தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.  புனிதம் வாய்ந்த இந்த சரவணப் பொய்கை தண்ணீரில் அப்பகுதியினர் துணி துவைத்தும், குளித்தும் வருகின்றனர். சோப்புகளின் கவர்கள், சிகைக்காய், ஷாம்பு பாக்கெட்டுகளின் பாலிதீன் கழிவுகள், பழைய துணிகள், பாய்களை மக்கள் தண்ணீரில் விட்டுச் செல்கின்றனர். சில ஆண்டுகளாக மீன்பிடி குத்தகை விடப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான மீன்கள் செந்தன.  சரவணப் பொய்கையின் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் பச்சை நிறத்தில் உள்ளது. தற்போதும் அங்கு மக்கள் துணி துவைத்தும், குளித்தும் வருகின்றனர். தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா துறை செயலர் அபூர்வவர்மா, சரவணப் பொய்கையை பார்வையிட்டு, பொய்கையை புனிதமாக வைத்துக் கொள்ளவும், பக்தர்கள், மக்கள் குளிக்க, துணி துவைக்க மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டார். கோயில் சார்பில் இடம் ஒதுக்கி தர கோயில் அதிகாரிகளுக்கும், மற்ற பணிகள் துவக்க மாநகராட்சி கமிஷனருக்கும் உத்தரவிட்டார். சரவணப் பொய்கையின் புனிதம் காக்க செயலாளர் உத்தரவுப்படி கோயில், மாநகராட்சி நிர்வாகங்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !