உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி பூப்பல்லக்கு பூக்களின் செல்வாக்கு.

மதுரை மீனாட்சி பூப்பல்லக்கு பூக்களின் செல்வாக்கு.

மதுரை:இந்த பூமியின் பூக்கள் எல்லாம் உன் பூ முகம் பார்க்கத் தான் பூத்ததோ... உன் திருப்பாதங்கள் தொட்டு தழுவத் தான் பூக்களின் இதழ்கள் எல்லாம் உதிர்ந்ததோ... திருக்கல்யாண விழாக் கோலத்தில் அன்னை மீனாட்சி நீ, மாசி வீதிகளில் பூப்பல்லக்கில்
வலம் வருகையில் இடம், வலம் என, மக்கள் புடைசூழ உன் புகழ் பேசி பூரிப்பதை பார்க்க கண்கோடி தான் வேண்டும்...

சித்திரை திருவிழாவில் தன் அழகின் செல்வாக்கால் முத்திரை பதிக்கும், மீனாட்சி பூப்பல்லக்கு கட்டளைதாரர் மதுரை எஸ்.ரங்கநாதன் கூறியதாவது: என் தாத்தா அ.சொக்கலிங்கம் காலத்தில் இருந்து சித்திரை திருவிழா 10ம் நாளுக்கான பூப்பல்லக்கு செய்து கொடுக்கும் இறைபணியை செய்து வருகிறோம்.

தாத்தா, தந்தை காலத்திற்கு பின், பூப்பல்லக்கு பொறுப்பை நான் ஏற்று செய்து வருகிறேன். 75 வயதாகும் நான் மீனாட்சிக்கு சேவை செய்யும் போது 20 வயது இளைஞரை போல மாறிவிடுவேன். அவள் பெயரை சொல்லி பல்லக்கு தயாரித்து கொடுக்கும்  ஒவ்வொரு ஆண்டிலும் என், வாழ்க்கையில் ஏதாவது ஒரு மகிழ்ச்சியான மாற்றங்கள் இருக்கும்.

அதே மகிழ்ச்சியுடன் பூப்பல்லக்கை அலங்கரிக்க தேவையான துரா என்று சொல்லக்கூடிய மலர் குடை, பல வண்ண மலர்கள் கோர்த்த வளைவுகள், குதிரைக்கான மலர் கடிவாளம், பல்லக்கில் முன் தொங்கவிடும் பூச்சரங்கள், கோபுரம் என, ஒவ்வொரு பொருட்களையும் தனிக் கவனம், பக்தியுடன் செய்திருக்கிறோம். இவை எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்ட பின் தான் அன்னையின் அழகான பல்லக்கு முழு வடிவம் பெறுகிறது. இதில் மல்லிகை, கனகாம்பரம், விருட்சிகப்பூ, அரளி, மாசி பச்சை, சம்பங்கி, செவ்வந்தி உள்ளிட்ட மணம்வீசும் மலர்கள் உள்ளன.

அன்னைக்கு சேவை செய்யும் கோடிக்கணக்கான குடும்பங்களில்,  எங்கள் குடும்பமும் இருக்கிறது என்று, நினைக்கும் போதுபெருமையாக இருக்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !