சேலம் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர்திருக்கல்யாண வைபவம் கோலாகலம்
சேலம்: மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம், கோலாகலமாக நடந்தது. சேலம், செவ்வாய்பேட்டை, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோவில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த, 26ல், முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. நேற்று மதியம், 12:30 மணியளவில், யாக வேள்வியுடன், திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு, ஊஞ்சல் உற்சவம் முடிந்ததும், பெண் பக்தைகள் பலர், மஞ்சள் இடித்து, அம்மனுக்கு
நலங்கு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு பச்சைப்பட்டு உடுத்தி, மேள, தாளம் முழங்க அழைத்து வந்து, உற்சவர் சுந்தரேஸ்வரருடன், சமேதராக அமரவைத்தனர். சிவாச்சாரியார் சாமிநாதன், வேத மந்திரம் ஓதி, மாங்கல்யம் அணிவித்து, மாலை
மாற்றி, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினார். பக்தர்கள், மொய் வைத்து, தரிசனம் செய்த பின், அனைவருக்கும் பிரசாதம் மற்றும் திருமண விருந்து
உபசரிக்கப்பட்டது.
சேலம், அம்மாபேட்டை, ஆதிசெல்வகணபதி தெருவில் உள்ள, பரிமளரெங்கநாதர் கோவிலில் இருந்து, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட பழவகைகளுடன், பால், இளநீர், வேட்டி, சேலை அடங்கிய சீர்வரிசை தட்டுகளை, அப்பகுதி மக்கள் எடுத்துக்கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக, செங்குந்தர் சுப்ரமணியர் கோவிலுக்கு வந்தனர். நேற்று காலை, விநாயகர், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, மீனாட்சி, சொக்கநாதர் ஆகியோருக்கு, அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை, 11:45 க்கு, மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. அதில், 2,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு
மஞ்சள், குங்குமம், தாலி கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.