உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி சேவை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி சேவை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, புதிய முத்தங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் கோலாகலமாக நடந்தன.நாமக்கல்லில், ஒரே கல்லினால் ஆன பிரசித்தி பெற்ற
ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, சுவாமி, 18 அடி உயரத்தில் வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக நின்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயர் சுவாமிக்கு, வடைமாலை அலங்காரம், தங்க கவசம், வெள்ளிக்கவசம், வெண்ணை காப்பு, சந்தன காப்பு, புஷ்ப அங்கி போன்ற பல்வேறு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், ஆஞ்சநேயர் முத்தங்கி கமிட்டி அமைக்கப்பட்டு, விலை உயர்ந்த முத்துக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முத்தங்கி, ஆண்டு தோறும் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த
ஆண்டு, முன்பு தயாரிக்கப்பட்ட முத்தங்கியை காட்டிலும், உயர்தர முத்துக்களைக் கொண்டு, புதிய முத்தங்கியை, சம்பந்தப்பட்ட கமிட்டியினர் தயாரித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, 21ம் ஆண்டு முத்தங்கி சேவை நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.

காலை, 9:00 மணிக்கு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு, வடைமாலை சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மஞ்சள், குங்குமம், சந்தனம், திருமஞ்சள், சீயக்காய், நல்லெண்ணெய், பால், தயிர், பழங்கள், பஞ்சாமிர்தம் போன்ற நறுமணப் பொருட்களால்
அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, சுவாமிக்கு புதிய முத்தங்கியை அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !