திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் திருப்பணி துவக்கம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பெரியகோபுரம் திருப்பணிக்காக சாரம் கட்டும் பணி துவங்கியது. திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கிழக்கு பெரிய ராஜகோபுரம்‚ சன்னதி வீதியின் நுழைவு வாயிலாக உள்ளது. ஆயிரத்தி 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோபுரம் 11 நிலைகளுடன் 192 அடி உயரம் கொண்டது.
தமிழகத்தில் உயர்ந்த கோபுரங்கள் வரிசையில் இந்த கோபுரமும் இடம் பிடித்துள்ளது.அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இக்கோபுரம் பரனூர் கிருஷ்ணபிரேமி சுவாமிகளால் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பணி செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் திருப்பணி செய்வதற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் துவக்கியுள்ளார். திருப்பணி பூஜையை கிருஷ்ணப்பிரேமி சுவாமிகள் ஏற்கனவே துவக்கிவைத்த நிலையில் நேற்று திருப்பணிக்காக கோபுரத்தில் சாரம் கட்டும் பணி பந்தகால் பூஜையுடன் துவங்கியது.இதில் கோலாகளன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.