ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஓசூர்: ஓசூர், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பறவை காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகரில், பழமையான கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, மாவிளக்கு மற்றும் பல்லக்கு உற்சவ திருவிழா கடந்த, 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று, பக்தர்கள் அலகு குத்தியும், முதுகில் கத்தி அலகு குத்தி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் தொங்கிய படியும், நடை பயணமாகவும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் சுயம்பு கோட்டை மாரியம்மன், கங்கம்மா, எல்லம்மா, ஏடுகிரம்மா, இசக்கி மாரியம்மன், மணல் மாரியம்மன், துர்க்கையம்மன் ஆகிய, ஏழு கிராம தேவதை கோவில்களில் இருந்து, பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு, கரகம் ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்தனர். சில பக்தர்கள் தங்களது முதுகில் அலகு குத்தி, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இருந்தவாறு அருள்பாலித்த அம்மனை இழுத்துச் சென்றனர். கோவிலில், ஆடு வெட்டி சிலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என, மூன்று மாநிலங்களில் இருந்து, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவிலில் திரண்டதால், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கரகம், பால்குடம், பறவை காவடி மற்றும் அலகு குத்தி ஊர்வலமாக வந்த பக்தர்களால், தேன்கனிக்கோட்டை சாலை, ராமநாயக்கன் ஏரிக்கரை, ஏரித்தெரு, எம்.ஜி.,ரோடு, நேதாஜி ரோடு, பழைய பெங்களூரு சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்று வழிகளில் வாகனங்கள் திரும்பி விடப்பட்டன.