அதிகார நந்திக்கு 100 வது ஆண்டு
சென்னை மயிலையின் பங்குனிப் பெருவிழாவையும், அதன் அங்கமான அறுபத்துமூவர் வைபவத்தின் மகிமையையும் நாமறிவோம். இந்தப் பெருவிழாவின் மற்றொரு சிறப்பம்சம் 3ம் நாளன்று நடைபெறும். அதிகார நந்தி சேவை. அகிலநாயகனாம் கபாலீசன் பொலிவுடன் தன் மீது எழுந்தருள, அவரைச் சுமக்கும் பெருமிதத்துடன் கனகம்பீரமாக வீதியுலா வருவார் அதிகார நந்தி.
இந்த நந்தி வாகனத்தை வழங்கியவர். வந்தவாசி அருகே இருக்கும் தண்டரை கிராமத்தைச் சேர்ந்த த.செ. குமாரசாமி பக்தர் என்பவர். வைத்தியத்தொழில் மூலம், தங்கள் குடும்பத்துக்குக் கிடைத்த வருமானத்தில், நான்கில் ஒரு பங்கை கோயில்த் திருப்பணிக்காக வழங்கினார். இதையொட்டி அதுநாள்வரை மர வாகனமாக இருந்த இந்த வாகனத்தை வெள்ளித் தகடு வேய்ந்து கலையழகுடன் வடிவமைத்து வழங்கினார். இதற்கான பணிகள் 1912 ஆண்டு தொடங்கப்பட்டு 1917ல் நிறைவு பெற்றன. அப்போதைய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் செலவு இன்றளவும் குமாரசாமி பக்தரின் குடும்பத்தினர் ஆண்டுதோறும் உழவாரப்பணியாகக் கொண்டு இந்த நந்தி வாகனத்தை முறையாகப் பராமரிக்கின்றனர்.