மங்கலதேவி கண்ணகி கோயில் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கூடலூர்: கேரள வனத்துறையின் பலத்த கெடுபிடிகளுடன் தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. தமிழக வனப்பகுதி பளியன்குடி வழியாக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் நடந்து வந்து வழிபட்டனர்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக கேரள எல்லை வண்ணாத்திப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இங்கு ஆண்டுதோறும் கண்ணகியை கோவலன் வானுலகிற்கு அழைத்துச் சென்ற தினமான, சித்ரா பவுர்ணமியன்று விழா கொண்டாடப்படும். அதன்படி விழா கொண்டாடப்பட்டது. அதிகாலை 5:00 மணிக்கு குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். குமுளியில் இருந்து 14 கி.மீ., துõரமுள்ள கோயிலுக்கு ஜீப்பிலும், நடந்தும் சென்றனர். கொக்கரக்கண்டம் அருகே மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பிளாஷ்டிக் பைகள், கேன்களை பறிமுதல் செய்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கேரள வனத்துறை பக்தர்களை சோதனை என்ற பெயரில் பலத்த கெடுபிடிகளை செய்தது. இதனால் பலரும் சிரமப்பட்டனர். ஜீப் பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி கேரள வனத்துறை மூலம் செய்து தரப்பட்டிருந்தது. ஆபத்தான வளைவுகள் உள்ள பாதையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோயில் வளாகத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் இரண்டு மணி நேரம் வரை நின்று வழிபட்டனர். மங்கலதேவி கண்ணகி அம்மன் சர்வ அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழக பூசாரி ராஜலிங்கம், சபரிநாதன் அர்ச்சனை செய்தனர். காலையில் அம்மனுக்கு மலர் வழிபாடு, யாகபூஜை நடந்தது. பொங்கல் வைத்து வழிபட்டனர். பெண்களுக்கு மங்கல நாண், வளையல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு வழிபாடும் ,பூமாரி விழாவும் நடந்தது. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள், கும்பம் இட்டு யாக பூஜை நடத்தினர். குடந்தை தமிழ்ச்சங்கம் சார்பில், சிலப்பதிகார பாடல்கள் பாடப்பட்டது.