சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில், மாதம்தோறும் பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து செல்வர். இந்த மாதம் சித்ரா பவுர்ணமி என்பதால், வழக்கத்தைவிட கூடுதலாக பக்தர்கள் வந்தனர்.
சித்ரா பவுர்ணமி, நேற்று (மே 10) அதிகாலை, 12:09 மணிக்கு துவங்கி, இன்று அதிகாலை, 3:04 மணி வரை இருந்ததால், நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் நேற்று அதிகாலை வரை, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றவாறு இருந்தனர். பக்தர்களின் வசதிக்காக, 35 இடங்களில் கார் பார்க்கிங் வசதி, 12 தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு, 2,146 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில், 18 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், வெயிலின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர், குளிர்ந்த நீர் மற்றும் தர்பூசணி பழம் வழங்கப்பட்டது. கோவிலுக்குள் வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, நித்யானந்தா ஆஸ்ரமத்தை சேர்ந்த வெளிநாட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை, கிளி கோபுர நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி, வெளியேற்றினர். மற்ற பக்தர்கள், நான்கு மணி நேரத்திற்கும் மேல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.