மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தியுடன் தீ மிதித்த பக்தர்கள்
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தீ மிதித்தனர். நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட விழா, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் ஒவ்வொரு சமூகத்தாரும், சிறப்பு அபி?ஷகம், ஆராதனை செய்து வந்தனர். மண்டகப்படி செய்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் ஊர்வலம், வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன. நேற்று காலை நடந்த தீ மிதிவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முதலில் கோவில் பூசாரிகள் தீ மிதித்தனர். பின், பக்தர்கள், குழந்தைகள், அக்னி சட்டி எடுத்து வந்து, பக்தி பரவசத்துடன் தீ மிதித்துச் சென்றனர். நேற்று மாலை, தேர்திருவிழா துவங்கியது. சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., சந்திரசேகரன், அறநிலையத்துறை இ.ஓ., கிருஷ்ணன் உள்ளிட்டோர் வடம்பிடித்து துவக்கி வைத்தனர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.