அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவில் பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம்
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவிலை, லட்சகணக்கான பக்தர்கள் வலம் வந்தனர். திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலையை, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலின் சுற்று வழிப்பாதையான, ஆறு கி.மீ., தூரத்தை சுற்றி வந்தனர். முதல்படியான ஆறுமுகசுவாமி கோவிலில் இருந்து துவங்கி கண்ணகிகோவில், பெரிய ஓங்காளியம்மன் கோவில், பச்சியாயி கோவில், நாமக்கல் ரோடு மலை சுற்று சாலை பிரிவு வழியாக வாலரைகேட், செல்வ விநாயகர் கோவில், சின்ன ஓங்காளியம்மன் கோவில், தெற்கு ரத வீதி வழியாக மீண்டும் ஆறுமுகசுவாமி கோவிலை அடைந்து கிரிவலத்தை நிறைவு செய்தனர். பக்தர்களுக்கு சுக்கு காபி, பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஈரோடு, ப.வேலூர், சேலம், சங்ககிரி வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் ஊர்ந்து சென்று, நகர எல்லையை கடந்தன.
திருவிளக்கு பூஜை: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில், சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ரமேஷ், கண்காணிப்பாளர் உதயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். குபேர லஷ்மி அருள் பெற்று செல்வம் பெருக, கல்வி மேன்மை உண்டாக, உலக நன்மை வேண்டியும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது.